Sunday, June 28, 2009

இந்தியாவும், இலங்கையும்


இந்தியாவும், இலங்கையும்

ஓர் எழுத்து இதில் அகதியாய்

வந்தது தான் எங்கள் தலை எழுத்து

தமிழ்க் கொண்டு என்னை வளர்த்த தாயகமே

எங்கள் உயிர்க்காத்த உனக்கு

ஒரு வந்தனமே....

பச்சைக்கிளி கூட்டம் போல

வாழ்ந்து வந்தோம்

இன்று பிச்சை எடுக்கும் கூட்டம் போல

சிதைந்து விட்டோம்

சொத்து சுகம் எல்லாம்

பறி கொடுத்து இன்று

சோத்துக்காக நின்றோம் கைகட்டி

பத்து வருடம் ரத்தம் சிந்தி

சோர்த்தது எல்லாம் பத்து நிமிட

வாழ்க்கை போல கரிச்சாம்பலானது

பித்துபிடித்த தீ பற்றி எல்லாம்

எரிந்து போனதால் கச்சை கூட

இல்லாமல் கை ஏந்தி நின்றோம்.

அகதியை ஓடி வந்தோம்

நாங்கள் வாடிக்கையா

அகதிக்குள்ளே அகதியாக வாழ்ந்து

இன்று வேடிக்கையான

எங்கள் நிலை,

இதற்கு காலம் தன்

பதில் சொல்ல வேண்டும் ...

Wednesday, May 20, 2009

திருவிளையாடல்


ஏழை தான் நான் _ ஆனால்

என் வீட்டினில் ஆயிரம் விளக்கின் ஒளி

எப்படித் தெரியுமா?- அத்தனையும் ஓட்டைகள்

என் வீட்டு கூரையில் சூரிய நமஸ்காரத்துக்கு

நான் வாயிற்படி தாண்டியதில்லை

உச்சி வேளையில் உணவு வேகவைக்க

வெப்பமூட்டுவதில்லை - ஏன்னென்றால்

வெந்துபோய் இருக்குது, வறட்சியால் என் வீடு.

இரவில் என் வீட்டினுள் நிலாசோறு

மார்கழிப் பூவெல்லாம் மலர்கின்றது என்

வீட்டில் மழைக்காலமென்றால்

மழலைக்கு கொண்டாட்டம்

எனக்கோ நீரோட்ட போராட்டம்!

ஒழுகும் நீரைப் பிடிக்க ஒட்டை சட்டி

அடுப்பங்கரைக்குள் ஆறு வெள்ளம்

நித்திரைக்கு வழியில்லை, நிம்மதிக்கு துணையில்லை

இயற்கைக்குக்கூட இத்திருவிளையாடல்

நடத்த இடமே இல்லையா......?

என் வீட்டை தானே எட்டிப் பார்க்கிறது.......

நாளைய பதிவுகள்


என் செல்லமே, மேகத்தின்

வெப்பத்தில் இன்றைய

சுவடுகள் நாளை

பதிவாகின்றன - நீண்ட

யுகத்தைப் பற்றி - ஒற்றை

வினாடியில் நீ ஊர்ந்து

கொண்டுடிருப்பதை விட்டுவிட்டு

சுற்றி வரும் உலகைப் பற்றி பிடி

யாராவது தட்டிப் பறித்தல் எட்டிப் பிடி

நாளைய சமுதாயத்திற்காக

கணினியையும் கலப்பையும் கற்றுக் கொள்,

விண்வெளியின் முதுகில் - உன்

விரல்கள் தொடு,

தேடிக் கொண்டிரு - புதியன

புறப்பட்டுக் கொண்டு வரும்.

Sunday, May 17, 2009

அமைதி


அமைதியாக அகதியாக,

தங்க இல்லம் ஏதுமின்றி

இடங்கள் பெயர்ந்து,,

உடமைகள் இழந்து,

உயிர்கள் போகும்,

நிலையினை மாற்ற

மரண நிழலில் வாழும் போது

மகிழ்ச்சி வாழ்வை எமக்கருள,

கவலை அனைத்தையும் போக்கி

எமக்கு கனிந்த அமைதி விரைவில் வர,

அச்சம் கொண்டு அழுது புலம்பி

அஞ்ச என்றுரைக்க இனி ஒரு யுகம் வருமா???

மனிதநேயம் மலர


ஈழத்தில் குண்டு வெடிப்பு
எங்கள் இதயங்களின்
புகை மண்டலம்

அங்கு எழும் அழுகுரல்
இன்னும்
எங்களின் செவிகளில்

அவர்கள் சிந்திய
கண்ணீர் துளிகள்
எங்களின் உயிரையும் நனைத்தது,,,,

தோண்டத் தோண்ட குண்டுகள்
ஈழமென்ன வெடிகுண்டுகளின்
அட்சய பாத்திரமா......?

வெடித்த சத்தம் ஓய்வதற்குள்
இன்னொரு பலியா?

இறந்தவர்கள் இந்துக்கள், முஸ்லீம்கள்,
என்பதற்கு மேல்
தமிழர் என்பதை ஏன் மறந்தீர்,,,?

மனிதநேயம் மதங்களுக்கு
அப்பாற்பட்டது.,,,
எந்த மதமும் சொல்லவில்லை
மனிதநேயத்தை மறக்கும்படி,,,
இனியாவது மனிதநேயம்
காத்து நிற்போம்
இல்லையானால்
மனிதன் என்ற பெயரை
மாற்றி வைப்போம்.

இன்றைய ஈழம்


ஈழம் இன்று உலகம் முழுதும்

முனங்கும் வேதம்,

வழியின் உச்சத்தில் வார்த்தைகள்

எச்சம் போடும் தேசம்,,,

அய்யோ, என்ற வார்த்தையில் - உண்மை

அர்த்தத்தை உணர்த்தும் பூமி

கண் இமைக்கும் நேரத்தில்

குண்டு மழைகள்,

குவியல் குவியலாய் மனித கரிகள்,

வானத்தில் இருந்து

இயந்திர கழுகுகளின் எச்சங்கள்,

மரங்களிலும் கரங்களிலும் பாதி உடல்கள்,,,

ஒற்றை உடலுக்காக ஒரு குழி தோன்றி

ஒன்பது பெயரை புதைக்கும் வரம் கொண்ட தேசம்,,

உடைகள் மாற்ற ஓரமாய், ஒரு இடம் இல்லை,,

ஓரமாய் இடம் இருந்தால் மாற்ற உடை இல்லை,

அய்யோ,,

புத்தனின் புதல்வர்கள்,

காடுகளுக்குள் காமப் பார்வைகளோடு,,..

இழவு வீடு இங்கு ஒன்று இரண்டு நடக்கின்றது,

அங்கே இழவு தேசமே கிடக்கின்றது,

மிதந்து வருகின்றன உடல்கள் இரத்த ஆறுகளில்,,,,

நாற்பது வயது ஈழத்துக்காய்

தேடிக் கொண்டு இருகின்றாள்

மகளையும், மகனையும்

உயிர்ரோடோ அல்லது பிணமாகவோ

பாதுகாப்பு வளையத்துக்குள் பாதுகாப்பாய் இருக்குறர்கள்

எம் பெண்கள் கற்பை இழந்து விட்டு,,,,

கிளிகள் தானே பெற்று எடுத்தோம்

புலிகள் என்று சொல்லி புதைக்கிறர்கள்,,

இங்கே இமைகள் இருக்கி மூடினால்

நினைவுகளும் கனவுகளும்,,

ஆனால் அங்கே வெடிகுண்டு சத்தம்

ஈழத் தமிழன் கொண்ட பாவம்

தான் என்ன இறைவா! இது

இறைவன் இழைத்த சதியா?

இல்லை மனிதன் இழைத்த பிழையா?

Saturday, May 16, 2009

மனத்துளிகள்



மூடுகின்ற பனிக்கும் எனக்கும்


இடையே தொட்டு போகிறது சோலை காற்று


மழை விழுந்து படி இருக்க,


எப்படியே செல்லமாய் - வந்து


மோதுகின்றது மெல்லிய சாரல்,


தாழ்பால் விலகுகின்ற நொடியில்


உள்ளே வரலாம் - என


கதவடியில் காத்திருந்தது


எட்டி பார்க்கிறது வெய்யில்,


நான் பூச்சுடுவது இல்லை,


இருந்த போதும் - எனக்கு


பூச்சூடி விடுகின்றன மரங்கள்


தங்கள் பூக்களை உதிர்த்து,


மெல்லிய இரவில்,


சாந்தமான தோற்றத்துடன்


அருகில் வந்து அமர்கின்றது என் நிழல்,,


மௌனமாய் இருக்கும் போது,


மழை கசிந்த இரவில்


மனதின் ஓரத்தில் மௌனம் பேசிக்கொண்டிருக்கும்,


மின்சாரம் விடுமுறை எடுக்கும் போது,


இருளில் மடியில் மின் மீனி பூச்சிகள்


மெல்லா சிரிக்கும்


என் கண் இமைக்கும் - இவ்வாறு


ஒவ்வொரு நாளும் விட்டு செல்கின்றன,


என் மனத்துளிகளை!